< Back
மாநில செய்திகள்
67 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
தேனி
மாநில செய்திகள்

67 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்

தினத்தந்தி
|
26 Nov 2022 12:15 AM IST

வைகை அணை நீர்மட்டம் 67 அடியாக குறைந்தத

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த ஆண்டில் 2 முறை அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை எட்டியது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததால் கடந்த 3 மாதங்களாக அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்தது. இதன்காரணமாக வைகை அணையில் இருந்து முதல்போகம், ஒருபோகம், 58-ம் கால்வாய் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்றில் உபரிநீரும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒருமாதம் ஆகியும் தேனி மாவட்டத்தில் மழை சரியாக பெய்யவில்லை. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை மிக குறைவாகவே பெய்தது. இதற்கிடையே பருவமழை பெய்ய வேண்டிய நேரத்தில் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பொதுவாக பனிப்பொழிவு இருந்தால் மழை பெய்யாது என விவசாயிகள் கூறுகின்றனர். வடகிழக்கு பருவமழை தற்போது வரை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் வைகை அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக முழுகொள்ளளவில் நீடித்து வந்த அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியதால், உசிலம்பட்டி பகுதி மக்களின் தேவைக்காக 58-ம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 67.67 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 639 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து பாசனம்,குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,719 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்