தேனி
50 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்: முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்
|ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக குறைந்தது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வைகை அணை
ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதேபோல், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2-ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம்.
இதன்மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த 3 ஆண்டுகளாக வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்தது. இதனால் ஜூன் 2-ந் தேதியே அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
நீர்மட்டம் குறைந்தது
இதனால் வைகை அணையின் நீர்மட்டம் உயரவே இல்லை. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 50 அடியாக குறைந்துள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் பெரிதும் எதிர்பார்த்த பருவமழையும் இதுவரை பெய்யவே இல்லை. இதனால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன்காரணமாக வைகை அணையை நம்பியுள்ள 5 மாவட்டங்களில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. மழையின்றி நீர் இருப்பு குறைந்து கொண்டே வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.