விருதுநகர்
வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்
|நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தல்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பு கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடங்கியது.
இந்த பணிைய கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப் பதிவுஎந்திரங்களை அனைத்தையும் சரிபார்க்கும் பணிகள் நிறைவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் பாதுகாப்பு கிட்டங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்புபணி வருகிற ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
அதன்படி வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு அறையிலிருந்து மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்களை பெல் நிறுவன என்ஜினீயர்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணியை தொடங்கினர். மேலும் இந்த சரிபார்ப்பு பணியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் முகவர்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நேரில் சென்று பார்வையிடலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.