திருப்பூர்
மாவட்டத்தில் 23 லட்சத்து 26 ஆயிரத்து 486 வாக்காளர்கள்
|திருப்பூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 23 லட்சத்து 26 ஆயிரத்து 486 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 23 லட்சத்து 26 ஆயிரத்து 486 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.
இறுதி வாக்காளர் பட்டியலில் விவரம் வருமாறு:-
தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 25 ஆயிரத்து 574 ஆண்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 133 பெண்கள், 11 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 718 வாக்காளர்கள் உள்ளனர். காங்கயம் தொகுதியில் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 24 ஆயிரத்து 937 ஆண்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 260 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 57 ஆயிரத்து 218 வாக்காளர்கள் உள்ளனர். அவினாசி தொகுதியில் 313 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 34 ஆயிரத்து 746 ஆண்கள், 1 லட்சத்து 43 ஆயிரத்து 152 பெண்கள், 7 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 77 ஆயிரத்து 905 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர்கள் விவரம்
திருப்பூர் வடக்கு தொகுதியில் 374 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 93 ஆயிரத்து 857 ஆண்கள், 1 லட்சத்து 89 ஆயிரத்து 441 பெண்கள், 145 மூன்றாம் பாலினத்தவர் என 3 லட்சத்து 83 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 33 ஆயிரத்து 877 ஆண்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 741 பெண்கள், 34 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 66 ஆயிரத்து 652 வாக்காளர்கள் உள்ளனர். பல்லடம் தொகுதியில் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 92 ஆயிரத்து 493 ஆண்கள், 1 லட்சத்து 96 ஆயிரத்து 682 பெண்கள், 69 மூன்றாம் பாலினத்தவர் என 3 லட்சத்து 89 ஆயிரத்து 244 வாக்காளர்கள் உள்ளனர்.
உடுமலை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 24 ஆயிரத்து 918 ஆண்கள், 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பெண்கள், 27 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 927 வாக்காளர்கள் உள்ளனர். மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 13 ஆயிரத்து 907 ஆண்கள், 1 லட்சத்து 19 ஆயிரத்து 452 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 33 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர்.
23,26,486 வாக்காளர்கள்
மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 513 வாக்குச்சாவடிகள் உள்ளன. 11 லட்சத்து 44 ஆயிரத்து 309 ஆண்கள், 11 லட்சத்து 81 ஆயிரத்து 843 பெண்கள், 334 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 23 லட்சத்து 26 ஆயிரத்து 486 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த முறையும் பெண் வாக்காளர்களே மாவட்ட அளவில் அதிகமாக உள்ளனர். புதிய வாக்காளர்களாக 35 ஆயிரத்து 614 பேர் சேர்க்்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 347 பேர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 763 பேர் திருத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு இறுதி வாக்காளர் பட்டியலின் நகல் இரண்டு பிரதிகள் வழங்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களின் விவரங்களை தனியாக கொடுத்தால் அதை சரிபார்க்க வசதியாக இருக்கும் என்று கட்சியினர் கோரிக்கை வைத்தனர். மேலும் வாக்காளர் பட்டியல் நகல் கூடுதலாக வழங்கவும் கேட்டுக்கொண்டனர்.
பார்வையிட வசதி
இறுதி வாக்காளர் பட்டியல், அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இறுதி வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்யலாம். மேலும் நேற்று முதல் தொடர் திருத்த பணிகள் நடைபெறுகிறது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவை மேற்கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.