திருப்பூர்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
|உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
திருத்தப் பணிகள்
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மாவட்ட அளவில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம் ஆகிய பணிகள் சிறப்பு முகாம்கள் மூலமும், ஆன்லைன் மூலமும் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 35 ஆயிரத்து 177 பேர், நீக்கத்திற்காக 25 ஆயிரத்து 953 ேபர், திருத்தத்திற்காக 18 ஆயிரத்து 243 பேர் என மொத்தம் 79 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்தனர்.
கடந்த 2022 டிசம்பர் 8-ந் தேதியுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்தது. இதனையடுத்து சுருக்கமுறை திருத்தப்பணிகள் முடிவடைந்த நிலையில் வாக்காளர் இறுதிப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இறுதிப்பட்டியல்
உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் நேற்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ஜலஜா, தாசில்தார்கள் கண்ணாமணி (உடுமலை), செல்வி (மடத்துக்குளம்), தேர்தல் பிரிவு தாசில்தார்கள் சையது ரபியம்மாள் (உடுமலை), ராஜேந்திர பூபதி (மடத்துக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்காளர் பட்டியலை உடுமலை தி.மு.க. நகர் மன்றத் தலைவர் வேலுச்சாமி, பா.ஜ.க. நகரத் தலைவர் கண்ணாயிரம் மற்றும் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.
உடுமலை தொகுதியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 918 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பெண் வாக்காளர்கள் மற்றும் 27 மூன்றாம்பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 927 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 907 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 19 ஆயிரத்து 452 பெண் வாக்காளர்கள் மற்றும் 20 மூன்றாம்பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 379 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பெண் வாக்காளர்கள் அதிகம்
உடுமலை தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 64 அதிகமாகவும், மடத்துக்குளம் தொகுதியில் பெண்கள் 5 ஆயிரத்து 545 அதிகமாகவும் உள்ளனர். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன், பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி. குமார், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.