தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுறுத்தல்
|தர்மபுரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நேரில் ஆய்வு நடத்திய வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா அறிவுறுத்தினார்.
பார்வையாளர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும் தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனருமான ஷோபனா நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி, பள்ளிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டார்.
அங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு தேவையான அனைத்து படிவங்கள் தயார் நிலையில் இருக்கிறதா? என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். சிறப்பு சுருக்க திருத்த முகாம்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள உரிய படிவங்களை வழங்க வேண்டும். அவற்றை பூர்த்தி செய்த பின் உரிய ஆவணங்களுடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்
இதைத்தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா தலைமை தாங்கி பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த சிறப்பு முகாம்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 878 வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட 1485 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது. இதுகுறித்து பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த சிறப்பு முகாம்களில் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய வாக்காளர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு உரிய அனைத்து பணிகளையும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, உதவி கலெக்டர்கள் ஜெயக்குமார், ராஜசேகரன், தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், தேர்தல் தனி தாசில்தார் சவுகத் அலி மற்றும் தாசில்தார்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.