வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை
|வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 234 அறைகளில் நடைபெறக்கூடிய இந்த வாக்கு எண்ணிக்கை பணிக்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு நடைபெறும்.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகளில் நுண்பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர்கள் உள்பட 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.