நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில், நாளை உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
|நாகை மாவட்டத்தில், நாளை உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
நாகை மாவட்டத்தில் நாளை உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி இடைத்தேர்தல்
நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பில் ஒரு ஒன்றியக்குழு கவுன்சிலர், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி தலைவர், 2 ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய 4 பதவியிடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் கடந்த 9-ந் தேதி நடந்தது.
இதில் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகளை வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதையடுத்து வாக்குப்பெட்டிகள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகின்றன.
திருமருகல்
திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும்போது செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் போது ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் பிற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.