ஓணான் செத்து கிடந்த மதுவை குடித்த தொழிலாளிக்கு வாந்தி-மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
|ஓணான் செத்து கிடந்த மதுவை குடித்த தொழிலாளிக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ்ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். தொழிலாளி. இவர் நேற்று மதியம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கினார். பின்னர் அவர் பாட்டில் மூடியை திறந்து கடகடவென மதுவை குடித்தார். பின்னர் மீதமுள்ள மதுவையும் அருந்த முயன்றார்.
அப்போது பாட்டிலில் ஓணான் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கொளஞ்சிநாதனுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கொளஞ்சிநாதன், அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுப்பிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.