சேலம்
குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட 115 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
|ஆத்தூரில் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவிகள் 115 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
ஆத்தூர்:-
ஆத்தூரில் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவிகள் 115 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
குடற்புழு நீக்க மாத்திரை
சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்தி நகரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 2 ஆயிரத்து 480 மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
அந்த மாத்திரைகளை சாப்பிட்ட சில நிமிடங்களில் மாணவிகள் சிலர் வாந்தி எடுத்தனர். ேமலும் சிலர் மயக்கம் அடைந்தனர். இதனால் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
115 மாணவிகள்
இதைத்தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் மாணவிகள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். வாந்தி-மயக்கம் ஏற்பட்ட மொத்தம் 115 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் கூடுதல் டாக்டர்களும் அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டு, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட தகவல் ஆத்தூரில் காட்டுத்தீ போன்று பரவியது. உடனே மாணவிகளின் பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதபடி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். டாக்டர்களின் சிகிச்சையை தொடர்ந்து 43 மாணவிகள் வீடு திரும்பினர். மீதமுள்ள 72 மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரணம் என்ன?
இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்கும் மாணவிகள் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தோம். இதனால் சில மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம். அதை பார்த்த சில மாணவிகளுக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு உள்ளது. மாணவிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சில மாணவிகள் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். மற்ற மாணவிகளும் குணம் அடைந்து விரைவில் வீடு திரும்பி விடுவார்கள் என்று கூறினார்கள்.