ராமநாதபுரம்
சத்துணவு சாப்பிட்ட 12 மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்
|பரமக்குடியில் சத்துணவு சாப்பிட்ட 12 மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடியில் சத்துணவு சாப்பிட்ட 12 மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
12 மாணவ-மாணவிகள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சிவானந்தபுரம் பகுதியில் நகராட்சி பள்ளி உள்ளது. இங்கு தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி கல்வியில் 240 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் 128 மாணவர்கள் பள்ளியில் தினமும் மதியம் சத்துணவு சாப்பிடுவது வழக்கம். நேற்று மதியம் வழக்கம்போல மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். மாணவர்களுக்கு உணவுடன் முட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில் சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகள் 12 பேருக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆட்டோ மூலம் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சப்-கலெக்டர் விசாரணை
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மாணவர்கள் சாப்பிட்ட முட்டை சரியாக வேகாமல் இருந்ததால் இந்த வாந்தி மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டு இருக்கலாம் என கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகராட்சி பொறியாளர் மீரா அலி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரித்தனர். பரமக்குடி நகர் போலீசாரும் விசாரணை நடத்தினர்.