< Back
மாநில செய்திகள்
ரத்தவாந்தி எடுத்து மயக்கம் ; தமிழக கைப்பந்து வீரர் நேபாளத்தில் மர்மச்சாவு - கலெக்டரிடம் பெற்றோர் மனு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ரத்தவாந்தி எடுத்து மயக்கம் ; தமிழக கைப்பந்து வீரர் நேபாளத்தில் மர்மச்சாவு - கலெக்டரிடம் பெற்றோர் மனு

தினத்தந்தி
|
26 Dec 2022 3:17 PM IST

தமிழக கைப்பந்து வீரர் ரத்தவாந்தி எடுத்து நேபாளத்தில் மரணம் அடைந்தார். அவரது உடலை பெற்று தரக்கோரி திருவள்ளூர் கலெக்டரிடம் அவரது பெற்றோர் மனு அளித்தனர்.

திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நேருதாசன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆகாஷ் (வயது 27). இளைய மகன் ஆதவன் (24). ஆகாஷ் கைப்பந்து விளையாட்டு வீரர். தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி நேபாள நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கலந்துகொள்ள சென்றிருந்தார். நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்ற விளையாட்டில் முதல் சுற்றில் வெற்றி பெற்று ஓய்வு எடுக்க சென்றார்.

பின்னர் ஓய்வு அறையில் ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த ஆகாஷை சக விளையாட்டு வீரர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சக விளையாட்டு வீரர்கள் ஆகாஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கைவண்டூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆகாஷ் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி உரிய முறையில் விசாரணை நடத்தி அவரது உடலை பெற்று தருமாறு மனுவை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர்.

மனுவை பெற்று கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்