< Back
மாநில செய்திகள்
சாக்லேட் சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

சாக்லேட் சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

தினத்தந்தி
|
17 Nov 2022 5:29 PM GMT

நெமிலி அருகே பிறந்த நாளையொட்டி மாணவன் வழங்கிய சாக்லேட் சாப்பிட்ட மாணவ- மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன்நேரில் விசாரணை நடத்தினார்.

நெமிலி அருகே பிறந்த நாளையொட்டி மாணவன் வழங்கிய சாக்லேட் சாப்பிட்ட மாணவ- மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன்நேரில் விசாரணை நடத்தினார்.

பிறந்தநாள் சாக்லேட்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கி உள்ளான். இந்த சாக்லேட்டுகளை சாப்பிட்ட 20 மாணவ- மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் ரதி தலைமையில் மருத்துவக் குழுவினர் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மாணவர்கள் சாப்பிட்ட சாக்லேட்டை ஆய்வு செய்தில் அது காலாவதியானதை டாக்டர்கள் உறுதி செய்தனர். தருண் என்ற ஒரே ஒரு மாணவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளான்.

கலெக்டர் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் புன்னை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவனின் உடல் நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளை பார்வையிட்டு அவர்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்தார்.

அப்போது பெற்றோர்கள் யாரும் அச்சம் அடையத் தேவையில்லை என்றும், தைரியமாக இருக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

கலாவதியானது...

இதனைத் தொடர்ந்து சாக்லேட் விற்பனை செய்த கடையில் ஆய்வு மேற்கொண்டதில், காஞ்சீபுரம் மாவட்ட மொத்த விற்பனையாளர்கள் மூலம் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பதும், அவை காலாவதியாகி உள்ளதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சாக்லேட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பு அலுவலர்களை சயனபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ், ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு, வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, தாசில்தார் சுமதி, வட்டார மருத்துவ அலுவலர் ரதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பவானி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்