திருப்பத்தூர்
குலோப்ஜாமூன் சாப்பிட்ட 6 பேருக்கு வாந்தி, மயக்கம்
|திருப்பத்தூரில் குலோப்ஜாமூன் சாப்பிட்ட6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ராம். ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினர்களுடன் ஏலகிரி மலைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பேக்கரியில் குலோப்ஜாமூன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் 4 குழந்தைகள், 2 பெரியவர்கள் என 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ராமு தன்னுடைய அலுவலகத்தில் உள்ள டாக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் ஆலோசனைப்படி முதலுதவி சிகிச்சை பெறறுள்ளார். பின்னர் ஏலகிரி மலையில் இருந்து வீட்டிற்கு திரும்பியபோது குலோப்ஜாமுன் வாங்கிய பேக்கரி கடைக்கு சென்று ராமுவும் அவரது உறவினர்களும் இதுதொடர்பாக கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்கும், கடைக்காருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று ஊருக்கு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று நேற்று ஆய்வு நடத்தினார்.
அப்போது குலோப்ஜாமுன் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் கடையில் ஜாங்கிரியில் அதிக அளவு கலர் சேர்த்ததற்காக ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கினார்.