மயிலாடுதுறை
ரத்த வாந்தி எடுத்து சாவு
|மயிலாடுதுறையில், ஜாமீனில் வந்த வாலிபர் ரத்த வாந்தி எடுத்து இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே சித்தர்க்காடு சோழியர் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் அஜீத்குமார் (வயது 25). இவர் நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் மதியம் 3 மணி அளவில் வீட்டிற்கு வந்த அஜித்குமார் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் அஜீத்குமாரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அஜீத்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமார் இயல்பாக உடல்நிலை சரியில்லாமல் ரத்த வாந்தி எடுத்தாரா?, மதுவில் ஏதாவது கலந்து சாப்பிட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துபோன அஜீத்குமார், அதே பகுதியில் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.