மிக்ஜம் புயல் பாதிப்புகளின்போது களப்பணியாற்றிய தன்னார்வலர்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பாராட்டு
|தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும், மனிதநேயம் தழைக்கட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜம் புயல் பாதிப்புகளின்போது களத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது. அத்தகையப் பேரிடர் நேரத்தில், மக்களை காக்க அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி மீட்பு - நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.
தங்களின் உயிரைப் பணயம் வைத்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்தபோது, களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள். தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும்! மனிதநேயம் தழைக்கட்டும்!"
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.