விழுப்புரம்
தர்மத்தை அழிக்க யார் வந்தாலும் துணிவுடன் எதிர்த்து போராடும் எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் விஸ்வ இந்து பரிஷத் அகில உலக பொதுச்செயலாளர் பேச்சு
|தர்மத்தை அழிக்க யார் வந்தாலும் துணிவுடன் எதிர்த்து போராடும் எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக பொதுச்செயலாளர் பேசினார்.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் விழுப்புரத்தில் ஸ்ரீராமானுஜரின் 1006-வது ஜெயந்தி விழா, விஸ்வ இந்து பரிஷத் தொடங்கப்பட்டதன் 60-ம் ஆண்டு விழா, வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக பொதுச்செயலாளர் மிலிந்த் பிராண்டே கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தர்மத்தை பாதுகாக்க
தர்மமே பிரதானமாகும். தர்மத்தை காப்பது நமது கடமை. தமிழகத்தை ஆட்சி செய்த அரசர்கள், மன்னர்கள் தர்மவாதிகளாக திகழ்ந்திருக்கின்றனர். தற்போது தமிழகத்தில் திராவிட நாடு, திராவிடம் என்ற மாயை உருவாகியுள்ளது. இந்துக்களை வாழ வைப்பது, அவர்களை ஒன்றுபடுத்தி நிலைநாட்டுவது நமது கடமையாகும். தூணிலும், துரும்பிலும் இறைவன் இருக்கிறார் என்கிறோம். அப்படி கூறிவிட்டு நாம் மதத்திலும், சாதியிலும் வேறுபாடு பார்க்கலாமா?. எல்லோரும் இணைந்து வாழ வேண்டும். நம்மில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்று என்ற எண்ணம் வர வேண்டும். நமது நோக்கம் அனைவரையும் ஒருங்கிணைப்பதுதான். மதமாற்றத்துக்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது. தர்மத்தை அழிக்க யார் வந்தாலும், அதை எதிர்த்து துணிவுடன் போராடும் எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆசியுரை
இதனைத்தொடர்ந்து திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள், திருவண்ணாமலை சடைசாமி ஆசிரமம் தவத்திரு திருப்பாத சுவாமிகள், புதுச்சேரி மணலிப்பட்டு சுத்தாத்துவித சைவத்திருமடம் வாம தேவ சிவகுமாரசாமி தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். முன்னதாக அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தின் தவத்திரு ராமானந்த சுவாமிகள் திருவிளக்கேற்றினார்.
இவ்விழாவில் விஸ்வ இந்து பரிஷத்தின் தென்பாரத அமைப்பு செயலாளர் கேசவராஜ், இணைச்செயலாளர் நாகராஜன், வடதமிழக அமைப்புச் செயலாளர் ராமன், மாநில செயலாளர் ஞானகுரு, துணைத்தலைவர் சக்திவேல், திருக்கோவில் திருமடங்களின் மாநில அமைப்பாளர் சரவணகார்த்தி, ஆன்றோர் பேரவையின் சுதாகர், வடதமிழக இணைச் செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழுப்புரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் பாபு நன்றி கூறினார்.