சென்னை
விருகம்பாக்கத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை
|விருகம்பாக்கத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து கத்திமுனையில் இளம்பெண்ணை மிரட்டி விட்டு கொள்ளையன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன் (வயது 35). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரோஜா (30), இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பள்ளியில் இருந்து தனது மகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் அறையில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஓடி வந்து சரோஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து வைத்து மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து வீட்டிற்குள் சென்று பொருட்களை சரிபார்த்ததில், வீட்டில் இருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து கத்திமுனையில் இளம்பெண்ணை மிரட்டி விட்டு கொள்ளையன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.