விருதுநகர் வாக்கு எண்ணிக்கை: தே.மு.தி.க.வின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - செல்வப்பெருந்தகை
|விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தே.மு.தி.க. கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னை,
விருதுநகர் மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக தே.மு.தி.க. கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக தே.மு.தி.க. சில சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அங்கே 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமராவை வைத்து கண்காணிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. அதில் எந்த தவறும் நடக்கவில்லை. ஒருவேளை சந்தேகம் இருந்திருந்தால் அங்கேயே அவர்கள் மறுப்பு தெரிவித்திருக்கலாம். தேர்தல் அதிகாரியிடம் கடிதம் கொடுத்திருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு சென்னைக்கு வந்து இவ்வாறு அவதூறு பேசுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்."
இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.