விருதுநகர்
விருதுநகர் தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா தேர்பவனி
|விருதுநகர் தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவில் நடைபெற்ற தேர்பவனியில் திரளான பேர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஆற்றுப்பாலம் அருகே உள்ள கத்தோலிக்க ஆலயமான தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தின் 6-ம் ஆண்டு திருவிழா தேர் பவனியுடன் 10 நாட்கள் நடைபெற்றது.
திருவிழாவினை முன்னிட்டு கடந்த 29-ந் தேதி மதுரை வடக்கு மறைவட்ட அதிபர் அருளானந்தம் அடிகளார், மதுரை உயர்மறை மாவட்ட செயலக முதல்வர் அலெக்ஸ் ஞானராஜ் அடிகளார், ஆலய பங்கு தந்தை அந்தோணிசாமி அடிகளார் மற்றும் பங்கு இறை மக்கள் முன்னிலையில் ஜெபமாலை அன்னை உருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது. தினசரி மாலை நவநாள் திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. திருப்பலிக்கு பின் ஆலய வளாகத்தில் அன்னையின் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேர் பவனி நடைபெற்றது.
திருவிழாவின் 9-ம் நாள் அன்று மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மிக்கேல் அதிதூதர், புனித அந்தோணியார், தூய ஜெபமாலை அன்னையின் திருவுருவம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனியும் நடைபெற்றது.தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சிவகாசி சாலை, ஆனைக்குழாய், டி.டி.கே. சாலை வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. இதில் விருதுநகர் டவுன், நிறைவாழ்வு நகர், பாத்திமா நகர், பாண்டியன் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பேர் கலந்து கொண்டனர். நவநாள் திருப்பலியில் அருட்பணியாளர்கள் மதுரை தாமஸ் வெனிஸ் அடிகளார், மதுரை கிறிஸ்டியன் ஆனந்த் அடிகளார், ஆர்.ஆர். நகர் பீட்டர் ராய் அடிகளார், வ.புதுப்பட்டி ஜெய் ஜோசப் அடிகளார், தேனி முத்து அடிகளார், விருதுநகர் அருள் ராயன் அடிகளார், சிவகாசி மரியானுஸ் அற்புத சாமி அடிகளார், கருமாத்தூர் ஜான் கென்னடி அடிகளார், வடபட்டி அந்தோணிசாமி அடிகளார் மற்றும் அருட் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.
10-வது நாளன்று காலை 9 மணியளவில் மதுரை உயர்மறை மாவட்ட கத்தோலிக்க சேவை ஆசிரியர் லாரன்ஸ் அடிகளார் தலைமையில் புது நன்மை வழங்கும் விழாவும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.மாலை 6 மணியளவில் கொடி இறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிறைவாழ்வு நகர் பங்கு தந்தை அந்தோணிசாமி அடிகளார் தலைமையில் திருச்சிலுவை அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.