சேலம்
வீராணம் போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
|போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாக வீராணம் போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் நடவடிக்கையில் போலீசார் அதிரடியாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மளிகை, பெட்டிக்கடையில் போலீசார் திடீரென சோதனை செய்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர். ஆனால் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுக்கு சில உள்ளூர் போலீசார் உதவி செய்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில், சேலம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட வீராணம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் வேல்விநாயகம் (வயது 32) என்பவர், போதைப்பொருட்கள் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அந்த கும்பல் மூலமே சேலம் மாநகரில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவர் எச்சரிக்கை செய்தார். இருப்பினும், போலீஸ்காரர் வேல் விநாயகம் போதைப்பொருட்கள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததால் அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.