கடலூர்
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு: வீராணம் ஏரி தொடர்ந்து கண்காணிப்பு தென்பெண்ணையாறு கரைகளை பலப்படுத்தவும் கலெக்டர் உத்தரவு
|கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் வீராணம் ஏரி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தென்பெண்ணையாற்றின் கரைகளை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதால் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
223 பேர் மீட்பு
மேட்டூர் அணை நிரம்பியதால், அங்கிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு, கீழணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் திறந்து கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர் படிப்படியாக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 4½ லட்சம் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஆற்றில் தற்போது 2 லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது. இருப்பினும் ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி, பெராம்பட்டு ஆகிய தீவு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதில் இருந்து 223 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு மீன் வளத் துறை, தீயணைப்பு துறை, காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அதி காரிகள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். அதேபோல் வீராணம் ஏரி ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது அந்த ஏரியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வடவாறு வழியாக ஏரிக்கு வரும் தண்ணீரை சேத்தியாத்தோப்பு மதகு வழியாக வெளியேற்றி வருகிறோம்.
கரைகளை பலப்படுத்த உத்தரவு
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது தென் பெண்ணையாற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இருப்பினும் தென்பெண்ணையாற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம். அதேபோல் கரைகளை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.