< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் விளையாட்டு வன்முறை காட்சிகள் குழந்தைகள் மனதை பெரிதும் பாதிக்கின்றன -நீதிபதிகள் கருத்து
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு வன்முறை காட்சிகள் குழந்தைகள் மனதை பெரிதும் பாதிக்கின்றன -நீதிபதிகள் கருத்து

தினத்தந்தி
|
27 Sep 2022 8:49 PM GMT

ஆன்லைன் விளையாட்டு வன்முறை காட்சிகள் குழந்தைகள் மனதை பெரிதும் பாதிக்கின்றன என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மதுரை,

நாகர்கோவிலை சேர்ந்த அயரின் அமுதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். சமீபத்தில் அவர் மிகவும் சோகமாக காணப்பட்டார். இந்நிலையில் எனது மகளை கடந்த 6-ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம்.

தடை செய்யப்பட்ட பப்ஜி மற்றும் ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் எனது மகள் ஆர்வம் காட்டியுள்ளார். அதன்மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்தான் ஆசைவார்த்தை கூறி, எனது மகளை அழைத்து சென்றுள்ளார். எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டபோதும், அந்த விளையாட்டுகளை மீண்டும் பதிவிறக்கம் செய்து, எவ்வாறு விளையாட முடிகிறது? என கேள்வி எழுப்பி இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வெவ்வேறு பெயர்களில் வருகின்றன

அப்போது மனுதாரர் மகளை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.

மேலும், ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டில் வரும் வன்முறை காட்சிகள் குழந்தைகள் மனதை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த விளையாட்டுகளை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது, என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்