< Back
மாநில செய்திகள்
கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டிஜிபி சங்கர் ஜிவால்
மாநில செய்திகள்

கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டிஜிபி சங்கர் ஜிவால்

தினத்தந்தி
|
28 July 2023 10:15 AM GMT

என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக பாமக நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்தனர். பாமகவினர் கல் வீசி தாக்கியதில் போலீசார் சிலரும் காயம் அடைந்தனர். தற்போது போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்விடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாமக நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால், நெய்வேலி செல்ல உள்ளார். போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் கூறியிருப்பதாவது: சுமார் 25 நிமிடம் நடைபெற்ற போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 500- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள், காவல்துறை வாகனங்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்