< Back
மாநில செய்திகள்
விதி மீறல்கள், நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்: தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு
மாநில செய்திகள்

விதி மீறல்கள், நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்: தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு

தினத்தந்தி
|
2 July 2024 5:08 PM IST

நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை நகரில் தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையர் சார்பில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தாக்கல் செய்த அறிக்கையில், வாகனங்களில் தடை செய்யப்பட்ட "சன் கன்ட்ரோல் பிலிம்" ஒட்டப்படுவதை தடுப்பதற்கும் அதனை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் வாகனங்களில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த மே மாதம் வரை சென்னை மாநகரில் சன் கன்ட்ரோல் பிலிம் பயன்படுத்தியதாக 6 ஆயிரத்து 279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலமாக 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.

அதே போன்று போக்குவரத்து விதி மீறல்கள், நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது தொடர்பாக 51, 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 கோடி 57 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரம் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் செய்திகள்