வாகன நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல்; சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் இன்று முதல் சோதனை
|நம்பர் பிளேட் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அந்த இடத்திலேயே ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்னை,
சென்னை முழுவதும் இன்று முதல் வாகன நம்பர் பிளேட் சோதனையை போக்குவரத்து போலீசார் தொடங்கியுள்ளனர். இதன்படி விதிமுறைகளை மீறி வாகனங்களில் நம்பர் பிளேட் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
குறிப்பாக சென்னை முழுவதும் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான பார்க்கிங் இடங்கள் உள்ளன. முதற்கட்டமாக இந்த பார்க்கிங் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் சோதனை செய்து, நம்பர் பிளேட் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அந்த இடத்திலேயே ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதம் விதித்ததற்கான சான்றிதழையும் சம்பந்தப்பட்ட வாகனங்களில் போலீசார் ஒட்டிச் செல்கின்றனர். இவ்வாறு ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்டு, நம்பர் பிளேட்டை மாற்றாமல் மறுமுறையும் பிடிபட்டால் அவர்களுக்கு 3 மடங்கு அதிகமாக சுமார் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.