அரியலூர்
விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை
|விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்கும் மாநில விளையாட்டு சங்கங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களுக்கு தமிழ்நாட்டில், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்திடவும், தேசிய போட்டிகளில் தமிழ்நாடு அணிகள் பங்கேற்பதற்கான மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், மாநில விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்திட பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும், அமைப்புகளும் மாநில அரசிடம் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிமுறைப்படி, தமிழ்நாடு விளையாட்டு சட்டத்தினை நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டரீதியான நடவடிக்கை
அதன்படி, இனிவரும் காலங்களில், அனைத்து விளையாட்டு சங்கங்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற விளையாட்டு சங்கங்கள் மற்றும் தொடர்புடைய அகில இந்திய சம்மேளனம் வழங்கிடும் சான்றிதழ்கள் மட்டுமே பொறியியல், பிற தொழில்முறை படிப்புகளில் 3 சதவீத விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் உயரிய ஊக்கத்தொகை வழங்கிட பரிசீலிக்கப்படும். அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் தாங்கள் பங்கேற்கும் போட்டிகள் அங்கீகாரம் பெற்ற விளையாட்டு சங்கங்கள் மூலம் நடத்தப்படுகின்றதா? என்பதை அறிந்து போட்டிகளில் பங்கேற்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாக ஆணையத்தின் பெயரை குறிப்பிட்டு சான்றிதழ்கள், பெயர் மற்றும் முத்திரையை பயன்படுத்துவது தெரிந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.