< Back
மாநில செய்திகள்
வாகன விதி மீறல்: 50 டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை- போலீஸ் சூப்பிரண்டு தகவல்
மதுரை
மாநில செய்திகள்

வாகன விதி மீறல்: 50 டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தினத்தந்தி
|
19 Oct 2023 2:49 AM IST

விதிகளை மீறிய 50 வாகன டிரைவர்களின், லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.


விதி மீறல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த மாதம் 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில், பங்கேற்கச் சென்ற வாகனங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இமானுவேல் சேகரன் நினைவு நாளில் பங்கேற்க செல்லும் வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு காவல்துறை தரப்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மதுரை விரகனூரில் உள்ள சோதனைச்சாவடியில் கேமராக்களும் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, 65 வாகனங்கள் விதிமுறைகளை மீறிச்சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த 65 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மேலும், வாகனங்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படை போலீசார் வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் 12 இருசக்கர வாகனங்கள், 38 கார்கள் உள்பட 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து டிரைவர்களின் வாகன ைலசென்சை ரத்து செய்ய காவல்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

1500 போலீசார் பாதுகாப்பு

கடந்த ஆண்டும் இதேபோல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவையொட்டி 1500 போலீசார் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.

ஏற்கனவே உள்ள காவல் சோதனைச்சாவடிகளோடு கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்தும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கும் வாகனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் இதேபோல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்