பெரம்பலூர்
அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்
|நாளை `லியோ' திரைப்படம் வெளியிடப்படுகிறது. இதில் அரசின் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விதிமுறை மீறல் இருந்தால்...
தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்களில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி (அதிகபட்சமாக 5 காட்சிகள் ஒரு நாளுக்கு) நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் லியோ திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் நாளை முதல் 24-ந்தேதி வரை ஒரு நாளில் அதிகபட்சம் 5 காட்சிகள் அனுமதிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும் வகையில் திரையிட வேண்டும். அதிகாலை 1.30 முதல் காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையிடக்கூடாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்கலாம்
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியரை 9445000458 என்ற செல்போன் எண்ணிலும், தாசில்தார்களை 9445000610 (பெரம்பலூர்), 9445000611 (வேப்பந்தட்டை) என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்களை 9445000459 (அரியலூர்), 9445000460 உடையார்பாளையம் என்ற செல்போன் எண்களிலும், தாசில்தார்களை 9445000613 (அரியலூர்), 9445000615 (செந்துறை), 9445000614 (உடையார்பாளையம்), 8508982907 (ஆண்டிமடம்) என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தியேட்டர்களில் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்ல, சரியான இருக்கை வசதிகள், வாகனம் நிறுத்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதனை ஆய்வு செய்ய சிறப்பு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, என்ற அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்), ஆனிமேரி ஸ்வர்ணா (அரியலூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.