பேரணியின்போது நிபந்தனை மீறல்: ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு
|ஆர்.எஸ்.எஸ் பேரணியின்போது நிபந்தனை மீறியதாக நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை,
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தது. அதன்படியே தமிழகத்தில் நேற்று பேரணியும் நடந்தது. கோவை மாவட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்பட 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.
கோவை மாநகரில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது. இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சீருடை அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியானது ஆர்.எஸ்.புரம், சுக்கிரவார்பேட்டை, தெலுங்குவீதி, ராஜவீதி வழியாக தேர்நிலைத் திடல் சென்று நிறைவு பெற்றது. பேரணியையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கோர்ட்டு நிபந்தனைகளை மீறி சிலம்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டு நிபந்தனைகளை மீறியதாக கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் முருகன், இணை செயலாளர் குமார் ஆகிய 3 பேர் மீது வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.