விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 18-ந் தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை
|விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 18-ந் தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரியில் வெளிவந்தபோதே, விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 17-ந் தேதி ஞாயிறு என்று இருந்ததை உடனே சுட்டிக்காட்டி திருத்தம் வெளியிட கேட்டோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கிறிஸ்தவ, முஸ்லிம் பண்டிகைகளை அந்த மதத்தலைவர்களை ஆலோசித்து அறிவிக்கும் தமிழக அரசு, இந்துக்களின் பண்டிகைகள் பற்றிய விவரத்தை தன்னிச்சையாக அறிவிக்கிறது.
தமிழகத்தில் 88 சதவீதம் உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தவறான தேதியில் அறிவித்ததை தமிழக அரசு திருத்தி அரசாணை வெளியிடாததை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி பண்டிகை அரசு விடுமுறையை செப்டம்பர் 18-ந் தேதி என உடனடியாக அரசாணை வெளியிடாவிட்டால், மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.