திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
|திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதற்கான பூஜை பொருட்களை வாங்குவதற்கு திருவள்ளூர் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
இந்நிலையில் திருவள்ளூரில் 111 சிலைகளும், ஊத்துக்கோட்டையில் 209 சிலைகளும், திருத்தணியில் 121 சிலைகளும், பொன்னேரியில் 46 சிலைகளும், கும்மிடிப்பூண்டியில் 153 சிலைகளும் ஆகிய 5 உட்கோட்டங்களில் 640 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் அந்தந்த போலீஸ் நிலையத்திலிருந்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 உட்கோட்டங்களிலும் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், அரக்கோணம் சாலையில் உள்ள முக்கண் விநாயகர், சேகர்வர்மா நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவில், சித்தூர் சாலையில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் பைபாஸ் சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோவில் உள்பட திருத்தணி நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலையில் சுந்தர விநாயகர் மற்றும் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பள்ளிப்பட்டு சங்கமேஸ்வரர் கோவில் முன்னால் பிரமாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வந்து கண்டு ரசித்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பொதட்டூர்பேட்டை ஆர்.கே.பேட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இதைபோல பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சாத்துக்குடி, ஆப்பிள், சோளம், மாதுளை போன்ற பழ வகைகளை கொண்டும், லட்டுகள் மற்றும் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. அதேபோல கடம்பத்தூர், மப்பேடு, கீழச்சேரி, புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர். நகர், சத்தரை போன்ற சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வாங்கி வழிபாடு செய்தனர்.
பொன்னேரி தடபெரும்பாக்கம் விநாயகர் கோவில், வேலூர் சுந்தர விநாயகர் கோவில், வாயலூர் பிள்ளையார் கோவில், திருவெள்ளைவாயல் கற்பக விநாயகர் கோவில், மீஞ்சூர் குளக்கரை விநாயகர் கோவில், நந்தியம்பாக்கம் தொள்ளாயிரம்காத்த விநாயகர் கோவில், இலவம்பேடு விநாயகர் கோயில், பஞ்சட்டி விநாயகர் கோவில், நத்தம் காரிய சித்தி விநாயகர் கோவில் உள்பட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.