நீர்நிலைகளை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்
|நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து இடங்களிலும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. நீர்நிலைகளில் கரைப்பதற்காக பல்வேறு மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகளின் விற்பனை களைகட்டியுள்ளது.
இந்நிலையில் நீர்நிலைகளை பாதிக்காதவாறு விநாயர்கர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை நடத்துமாற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விநாயகர் சதுர்த்தியின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. உலக வெப்பமயமாதல் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தல்களை ஏற்று நீர்நிலைகளை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.