விழுப்புரம்
விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையை இந்துசமய அறநிலையத்துறை கைப்பற்றியது
|நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியது. இதற்கு அறக்கட்டளை நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்
வள்ளலார் அருள்மாளிகை
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் வள்ளலார் அருள் மாளிகை சமரச சுத்த சன்மார்க்க சத்திய அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது. இதை ஜெய அண்ணாமலை என்பவர் நிர்வகித்து வந்தார்.
இந்த அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், எனவே இதை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றும் சீனிவாசன் என்பவர் கடந்த 2016-ல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஜெயஅண்ணாமலையும் மற்றொரு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இவ்வழக்கை விழுப்புரம் மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. அதன் பேரில் விழுப்புரம் மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் விசாரணை செய்ததில், கணக்கு வழக்குகள் சரியாக பின்பற்றப்படாமல் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.
நிர்வாகிகள் எதிர்ப்பு
இதையடுத்து விழுப்புரம் மண்டல இணை ஆணையர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்காக உதவி ஆணையர் சிவாகரன், செயல் அலுவலர் மதனா, தனி தாசில்தார் ராஜன், சரக ஆய்வாளர் லட்சுமி ஆகியோர் அங்கு சென்றனர்.
அப்போது அறக்கட்டளை நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்து வள்ளலார் அருள்மாளிகையை பூட்டி சாவியை தராமல் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளை மீறி செயல்படுவதாக கூறி அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்...
பின்னர் அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர். தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த வள்ளலார் அருள்மாளிகையின் கதவில் போடப்பட்ட பூட்டை அதிகாரிகள் உடைத்து உள்ளே சென்று அங்கு என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை கணக்கெடுத்தனர். பின்னர் வள்ளலார் அருள்மாளிகையை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அதிகாரிகள் கொண்டு வந்தனர்.
போலீஸ் பாதுகாப்போடு வள்ளலார் அருள்மாளிகையின் பூட்டை உடைத்து அதனை அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.