விழுப்புரம்
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் மேம்பால பணி நடப்பதால் விபத்து அபாயம்
|விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் மேம்பால பணி நடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேம்பாலம் அமைக்கும் பணி
விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எந்நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும் இந்த சாலையில் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலை பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வருகிறது. இதில் சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
எனவே விபத்தை தடுக்கும் வகையில் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். அதன்படி தற்போது அப்பகுதியில் நகாய் நிறுவனம் சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
பாதுகாப்பு நடவடிக்கை இல்லை
இப்பணிகள் நடைபெறும் அதே வேளையில், எந்தவித முன்அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்காமல் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் காரணமாக மாற்றுப்பாதையில் அதாவது சர்வீஸ் சாலையில் செல்ல வாகனங்களை திருப்பி விட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் விழுப்புரத்தை கடந்துதான் செல்ல வேண்டும். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்கின்றது. இப்படிப்பட்ட சூழலில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சாலையின் மற்றொரு புறத்தில் மேம்பால பணிகள் தொடங்கப்படாததால் அந்த சாலை வழியாக லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையின் ஓரமாக, மேம்பால பணிக்கான கட்டுமான பொருட்களை வைத்துள்ளனர்.
விபத்து அபாயம்
இதனால் அச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், சில சமயங்களில் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வாகனங்கள், மேம்பால பணிகள் நடப்பதும், சாலையோரமாக அதன் கட்டுமான பொருட்களை வைத்திருப்பதும் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு மேம்பால பணிகள் நடப்பதையொட்டி எச்சரிக்கை பலகைகள் வைப்பதோடு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.