< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் நகராட்சியில் விதிகளை மீறி விளம்பர பலகைகள், பேனர் வைத்தால் சிறை தண்டனை நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா எச்சரிக்கை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் நகராட்சியில் விதிகளை மீறி விளம்பர பலகைகள், பேனர் வைத்தால் சிறை தண்டனை நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா எச்சரிக்கை

தினத்தந்தி
|
21 Jun 2023 6:45 PM GMT

விழுப்புரம் நகராட்சியில் விதிகளை மீறி விளம்பர பலகைகள், பேனர் வைத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை நகராட்சியின் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதேபோல் சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்படவில்லையென்றால் நகராட்சியின் மூலம் அகற்றி அதற்கான செலவினத்தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

இந்த விதிமுறைகளை மீறி அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைத்தால் அந்நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையோ அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

மேலும் அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைத்தால் அந்நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோருக்கு ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து உரிமம் பெற்று அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சி பகுதியில் விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைத்த நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோரை முழு பொறுப்பாக்கி அவர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவல் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்