விழுப்புரம்: தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்கள் மாயமான விவகாரம் - ஆசிரமத்தை மூட கலெக்டர் உத்தரவு
|அசிரமத்தில் தங்கியிருந்தவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சுமார் 10 ஆண்டுகளாக தனியார் ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோரை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பூரைச் சேர்ந்த ஜபாருல்லா என்ற 70 வயது முதியவரை சேர்த்துள்ளனர். அடுத்த 2 நாட்களில் ஆசிரமத்தில் இருந்து 53 பேரை இடபற்றாக்குறை காரணமாக பெங்களூருவில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பியதாக தெரிகிறது.
இதனிடையே முதியவர் ஜபாருல்லாவின் உறவினர்கள் அவரைத் தேடி ஆசிரமத்திற்கு வந்து விசாரித்த போது, அவரை பெங்களூருவுக்கு அனுப்பி விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் பெங்களூருவில் சென்று பார்த்தபோது, அவர் காப்பகத்தில் இருந்து தப்பியோடிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜபாருல்லாவின் உறவினர் அலாவுதீன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜபாருல்லாவை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியது. சம்பந்தப்பட்ட ஆசிரமத்திற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி, அங்கிருந்து 142 பேரை மீட்டுள்ளனர். அவர்களை ஆசிரமத்தில் வைப்பதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கிருந்த 2 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தனியார் ஆசிரமத்தின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் 17 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். அங்கு தங்கியிருந்தவர்களில் 86 பேர் சிகிச்சை முடிந்து வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி பெறாமல் இயங்கி வந்த தனியார் ஆசிரமத்தை மூடுவதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.