விழுப்புரம்
வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்தவிழுப்புரம் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் :கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது
|வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழுப்புரம் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் திருத்த விதிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். துரை. ரவிக்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பழனி கூறியதாவது:-
தீருதவித்தொகை
விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 2023-ம் நிதியாண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 66 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 98 பேருக்கு தீருதவித் தொகையாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரத்து 750, எவ்வித நிலுவையுமின்றி உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த 23 பேரின் வாரிசுதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக தலா ரூ.5 ஆயிரம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து மொத்தம் ரூ.8 லட்சத்து 14 ஆயிரத்து 118 வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இன்றைய நிலையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடியே 31 லட்சத்து 22 ஆயிரத்து 868 வழங்கப்பட்டுள்ளது.
சமூக விழிப்புணர்வு
மேலும் வழக்குகளில் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பங்களில் 4 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. 28.8.2023 அன்று புதியதாக விழுப்புரம் வேளாண்மைத்துறை அலகில் ஒருவருக்கு இளநிலை உதவியாளர் அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 3 குடும்பங்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை அலகில் இளநிலை உதவியாளர் பணி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு எவ்வித நிலுவையுமின்றி உடனுக்குடன் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் சார்பில் ஒன்றிணைவோம் சமூக விழிப்புணர்வு தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், குமரவேல், வக்கீல் அகத்தியன், மணி, தனஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.