< Back
மாநில செய்திகள்
விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
மாநில செய்திகள்

விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

தினத்தந்தி
|
18 May 2023 5:13 AM GMT

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தனர். உடனே அவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தபோதிலும் அன்று இரவே எக்கியார்குப்பத்தை சேர்ந்த எஸ்.சங்கர், சுரேஷ், தரணிவேல் ஆகிய 3 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பின்னர் மறுநாள் (14-ந் தேதி) அதே ஊரைச்சேர்ந்த ராஜமூர்த்தி, மலர்விழி, மரக்காணம் மண்ணாங்கட்டி, எக்கியார்குப்பம் விஜயன் ஆகிய 4 பேரும், நேற்று முன்தினம் மரக்காணம் சங்கர், எக்கியார்குப்பம் கேசவவேலு, விஜயன், ஆபிரகாம், சரத்குமார் ஆகிய 5 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் விஷச்சாராயத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயா்ந்தது.

இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த எக்கியார்குப்பத்தை சேர்ந்த ராஜவேலு (வயது 46) என்பவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் கிளியனூர் அருகே கோவடியை சேர்ந்த சரவணன் (58) என்பவர் மரக்காணம் அரசு ஆஸ்பத்திாியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திாிக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.

இவர்களோடு சேர்த்து இதுவரை மரக்காணத்தில் விஷச்சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 58 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

செங்கல்பட்டு

இதேபோல் விஷச்சாராயம் குடித்ததால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 34). அவரது மாமியார் வசந்தா (40) ஆகியோர் விஷ சாராயம் குடித்ததால் கடந்த சனிக்கிழமை பரிதாபமாக இறந்தனர்.

சித்தாமூர் குறுவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெண்ணியப்பன் (65), சந்திரா (55) ஆகியோரும் விஷ சாராயம் குடித்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தனர். நேற்று முன்தினம் மாரியப்பன் (60) என்பவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே விஷ சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருங்கரனை கிராமத்தை சேர்ந்த அஞ்சாலை (22), முத்து (64), தம்பு (60), சந்திரன் (48), சின்னக்கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (40), செய்யூர் வட்டம் புத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜி (32) ஆகியோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சின்னக்கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர், பெருங்கரனை கிராமத்தை சேர்ந்த தம்பு, முத்து ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

செங்கல்பட்டு, மரக்காணத்தில் மேலும் 5 பேர் இறந்ததால் விஷச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. இதனிடையே இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தும் அவர் ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். விழுப்புரம் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் டிஎஸ்பிக்கள் சசிதர், செல்வகுமார், வேல் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். எக்கியார்குப்பம், சித்தாமூர் விஷச்சாராய வழக்கில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டநிலையில் இந்த விசாரணை தொடங்கி உள்ளது.

மேலும் செய்திகள்