கரூர்
வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
|வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கரூர் மாவட்டம், வெள்ளியணையில் பழமையான வெள்ளி நாயகி சமேத வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிக்காக விசாலமான பரப்பளவில் அழகிய சிற்பம் மற்றும் வர்ண வேலைப்பாடுகளுடன் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாரானது. இதனையடுத்து கடந்த 1-ந்தேதி தாரை தப்பட்டை மங்கள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் புனிததீர்த்தம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை, முதற்கால யாக பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை, மூல விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்தல் ஆகியவை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 4-ம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூைஜகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் கோபுரகலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில், கிழக்கு மேட்டு புதூர் விநாயகர் கோவில், கடை வீதி தங்கம்மாள் கோவில் ஆகியவற்றிலும் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், வழங்கப்பட்டது.