
நாகப்பட்டினம்
பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

நாகை அருகே சாலை அமைக்க மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
சாலை அமைக்க மண் எடுக்கும் பணி
நாகை கிழக்கு கடற்கரை சாலையில் விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக அந்தந்த பகுதிகளில் மண் எடுக்கப்பட்டு வருகிறது.இதேபோல் நாகை அருகே பெரும்கடம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட இளங்கடம்பனுர் பகுதியில் சுமார் 27 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்க மண் எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் போராட்டம்
மண் எடுக்க கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், மீறி மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரும்கடம்பனூர், இளங்கடம்பனூர் கிராம மக்கள், விவசாயிகள் நேற்று மண் எடுக்கும் இடத்துக்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இளங்கடம்பனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை நம்பிதான் வாழ்ந்து வருகிறோம். வேறு தொழில் இங்கு கிடையாது. 4 வழிச்சாலை திட்டத்திற்காக விளைநிலங்களை அழித்து மண் எடுக்கப்படுகிறது.
கோஷங்கள்
மேலும் வாய்க்கால்கள் தூர்க்கப்பட்டுள்ளது. எனவே சாலை அமைக்கும் பணிக்காக நிலங்களில் மண் எடுக்க கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.மேலும் மண் எடுக்கும் பணியை நிறுத்தாவிட்டால் அனைத்து விவசாயிகள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.