< Back
மாநில செய்திகள்
கிராம மக்கள் மறியல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கிராம மக்கள் மறியல்

தினத்தந்தி
|
29 April 2023 9:09 PM IST

நிலக்கோட்டை அருகே, சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சி சொக்குபிள்ளைபட்டி பிரிவில் இருந்து அணைப்பட்டி வரையிலான சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக, அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் உசிலம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

பழுதடைந்த நிலையில் உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அணைப்பட்டியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்