காஞ்சிபுரம்
வாலாஜாபாத் அருகே தேசிய ஊரக திட்ட பணி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல்
|வாலாஜாபாத் அருகே தேசிய ஊரக திட்ட பணி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேசிய ஊரக வேலை திட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அவளூர் கிராம ஊராட்சி உள்ளது. அவளூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்டு அவளூர், கண்ணாடியான் குடிசை, கணபதிபுரம் போன்ற கிராமங்கள் உள்ளடங்கி உள்ளது. அவளூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஆண்டுதோறும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு வழங்கி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம் கூலி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகம் தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்காமல் இருந்ததாக தெரிகிறது.
சாலை மறியல்
இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடமும், காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த அவளூர் கிராம மக்கள் ஒன்று கூடி வாலாஜாபாத் தம்மனூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராம மக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மாகரல் போலீசாரும், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்களும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தினரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சுழற்சி முறையில் வேலை வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.