< Back
மாநில செய்திகள்
பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு - தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு - தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
12 Nov 2022 1:49 PM IST

ஊத்துக்கோட்டை அருகே பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 30 வருடங்களாக கோரிக்கை மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை வலியுறுத்தி கடந்த மாதம் 26-ந் தேதி திறந்தவெளியில் சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தினர்.

ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார் நேரடியாக சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தி, வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் பெரம்பூரில் உள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை பட்டா வழங்க அளவீடு பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முரளி தலைமையில் பெரும் திரளான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அந்த குறிப்பிட்ட இடத்தில் அரசு பள்ளி, ஆஸ்பத்திரி அல்லது அரசு அலுவலகம் கட்ட அனுமதி வழங்க வேண்டுமே தவிர வீட்டுமனை பட்டா வழங்க கூடாது எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த உடன் தாசில்தார் அருண்குமார் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிப்பதாக கூறியதையடுத்து, பெரம்பூர் கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்