கள்ளக்குறிச்சி
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்
|சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
சங்கராபுரம்
குடிநீர் வினியோகம் பாதிப்பு
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை ஊராட்சிக்குட்பட்ட பாவளம் கிராமம் 3-வது வார்டில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பாவளம் பஸ் நிறுத்தம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் குறிப்பிட்ட வார்டில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த மறியலால் சங்கராபுரம்- மல்லாபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் இணைப்பு கேட்டு
அதேபோல் பூட்டை கிராமம் 9-வது வார்டில் பெரும்பாலான தெருக்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதே வார்டில் கெங்கையம்மன் கோவில் மேற்கு தெருவில் உள்ள 50 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. கழிவுநீர் கால்வாய் வசதியும் செய்துதரப்பட வில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 1-ந் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று மீண்டும் பூட்டை காலனி பஸ் நிறுத்தம் அருகே கிராமமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது.
இந்த மறியல் போராட்டத்தால் சங்கராபுரம்- பாலப்பட்டு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.