< Back
மாநில செய்திகள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்

தினத்தந்தி
|
2 Oct 2023 11:49 PM IST

கந்தர்வகோட்டை அருேக குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் கேட்டு...

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை ஊராட்சியில் பந்தலகோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஒரு ஆண்டிற்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாண்டான் விடுதி கிராமத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய ஆணையரிடமும் மனுக்கள் அளித்தும் இதுவரை குடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள்குடிநீர் கேட்டு கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை ஒன்றிய ஆணையர், கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் முயற்சி

அறந்தாங்கி அருகே கோங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் எழுந்து நின்று எங்கள் பகுதியில் குடிதண்ணீர் உப்பு தண்ணீராக கடந்த 6 மாதங்களாக வருகிறது என்று கூறினர். அப்போது, தலைவர், துணைத் தலைவர் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் எழுந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் கேட்டு காரைக்குடி சாலையில் மறியல் செய்வதற்கான கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்