கரூர்
குடிநீர் கேட்டு கிராமமக்கள் மனு
|கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு கிராமமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 412 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் 40 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 9 அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் பயிற்சி நூல்களும், 2 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.
நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி
கூட்டத்தில், நன்செய் புகழூர் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நன்செய் புகழூர் சுடுகாடு அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒப்பந்ததாரர்கள் மூலம் திடீரென எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ராட்சத எந்திரங்கள் மூலம் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதனால் எங்கள் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மோட்டார் மற்றும் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் குடிநீருக்காக அவதி அடைந்து வருகிறோம். எனவே இந்த பணிகளை உடனே நிறுத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மகளை காணவில்லை
தொண்டமாங்கினம், கொண்டம்பூசாரியூரை சேர்ந்த நல்லங்காள் என்ற பெண் கொடுத்த மனுவில், எனது 15 வயதுடைய மகள் தனியார் மில்லிற்கு வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வரவில்லை.
இதுகுறித்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய விசாரணை நடத்தி மகளை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆயுதப்படை போலீஸ்காரர் மீது புகார்
கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த லதா என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். எங்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 6 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் என்னை அடித்து கஷ்டப்படுத்துகிறார். எனக்கும், எனது குழந்தைகளுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.