திருவள்ளூர்
குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
|கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சியை சேர்ந்தது முத்துரெட்டி கண்டிகை கிராமம். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் எற்கனவே தனியார் நிலத்தில் செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அதன் அருகே மீண்டும் தனியார் நிலத்தில் மற்றொரு செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து செல்போன் கோபுரம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறுபுழல்பேட்டை ஊராட்சி அலுவலகம் மூலம் மனு ஒன்றை அளித்து உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மேற்கண்ட திட்டமிட்ட இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி துவங்கப்படுவதை அறிந்து வார்டு உறுப்பினர் சங்கர் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் முன்னிலையில் அங்கு சென்ற குடியிருப்புவாசிகள், கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட செல்போன் கோபுரம் அமைப்பாளர்களிடம் அதிகாரிகளின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர்.
இதனையடுத்து முற்றுகை போராட்டதை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.