< Back
மாநில செய்திகள்
தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை
வேலூர்
மாநில செய்திகள்

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை

தினத்தந்தி
|
3 July 2023 11:32 PM IST

பேரணாம்பட்டு அருகே சரியாக பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிக ஆசிரியர்கள்

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள சாத்கர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 185 மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக காட்பாடியை சேர்ந்த தேசாய் என்பவரும், ஆசிரியர்களாக ஜெயசுதா, கோமதி நாசிர், வெற்றி குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கலையரசன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் பணிபுரிந்து வந்த 5 ஆசிரியர்கள் கடந்த ஆண்டு பணியிடம் மாற்றம் பெற்று சென்றனர்.

இதனால் காலி பணியிடங்களான அறிவியல், ஆங்கிலம் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது குறித்து ஊராட்சி தலைவர் சங்கீத பிரியா, மற்றும் பள்ளி மேலாண்மை குழுவிடம் தலைமை ஆசிரியர் கலந்தாலோசனை பெறாமலும், உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து நியமனம் செய்யாமல் தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக கடந்த ஆண்டு குண்டலபல்லி ஊராட்சியை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரை ஆங்கில பாடத்திற்கு நியமனம் செய்தார். அவர் 6 மாதம் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

பள்ளிக்கு சரியாக வருவதில்லை

இதே போன்று சாத்கர் கிராமத்தை சேர்ந்த சித்ரா, பேரணாம்பட்டை சேர்ந்த ஜெயந்தி ஆகிய 2 பேரை அறிவியல் பாடத்திற்கு தற்காலிக ஆசிரியராக நியமனம் செய்தார். பின்னர் சித்ராவை தலைமை ஆசிரியர் திடீரென நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

தலைமை ஆசிரியர் தேசாய் சரியாக பணிக்கு வருவதில்லை என்றும், வாரத்தில் 2 அல்லது 3 நாள் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்வதாகவும், பள்ளிக்கு வரும் போது காலை 11 மணியளவில் கையெழுத்து போட்டு விட்டு சுமார் 3 மணி நேரம் மட்டும் இருப்பதாகவும், வகுப்பு நடத்தாமலும், மாணவர்களை கண்காணிக்காமலும், பள்ளியின் மாடியில் உள்ள அறையில் ஓய்வு எடுத்து விட்டு மதியம் 2.30 மணிக்குள் புறப்பட்டு சென்று விடுவார் என்றும் கூறப்படுகிறது.

தூய்மை பணியாளர்கள் இல்லாததால் பள்ளியை மாணவர்கள் தினமும் பெருக்கி தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முற்றுகை

இதனால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாத்கர் ஊராட்சி தலைவர் சங்கீத பிரியா மற்றும் பெற்றோர்கள், கிராம மக்கள் சார்பில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, கல்வி மாவட்ட அதிகாரி ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பினர். இதனையறிந்த தலைமை ஆசிரியர் ஒரு வாரம் மருத்துவ விடுப்பில் சென்றார்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று காலை சாத்கர் ஊராட்சி தலைவர் சங்கீதாபிரியா தலைமையில் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியை ஜெயசுதா என்பவர் பள்ளியை திறக்க வந்தார். அவரை பள்ளியை திறக்க விடாமல் தடுத்தனர். மேலும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளியை திறக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். 15 நாள் காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பள்ளி திறக்கப்பட்டு, மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்