< Back
மாநில செய்திகள்
ஆர்வமுடன் மீன்களை பிடித்த கிராம மக்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ஆர்வமுடன் மீன்களை பிடித்த கிராம மக்கள்

தினத்தந்தி
|
20 July 2023 1:15 AM IST

ராஜக்காபட்டி சிறுகுளத்தில் ஆர்வமுடன் கிராம மக்கள் மீன்களை பிடித்தனர்.

மீன் பிடி திருவிழா

சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டியில் சிறுகுளம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் அந்த குளம் நிரம்பியது. அதன்பிறகு குளத்தில் படிப்படியாக தண்ணீர் வற்ற தொடங்கியது. இந்தநிலையில் அந்த குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக சுற்றுப்புற கிராமங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை முதல் சிறுகுளத்துக்கு ராஜக்காபட்டி, நத்தம், செங்குறிச்சி, சிலுவத்தூர், செந்துறை, பண்ணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மோட்டார் சைக்கிள், கார்களில் வந்து குவிந்தனர்.

கிராம மக்களிடம் சிக்கிய மீன்கள்

குளத்துக்கரையில் பூஜைகள் செய்யப்பட்டு, கிராம முக்கியஸ்தர்கள் கொடி அசைக்க மீன்பிடி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த ஊத்தா, வலைகளை பயன்படுத்தி ஆர்வமுடன் கிராம மக்கள் மீன்களை பிடித்தனர்.

இதில் கட்லா, ஜிலேபி, கெழுத்தி, பாறை, விறா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. பிடிபட்ட மீன்கள், 10 கிலோ வரை எடை கொண்டதாக இருந்தது. இந்த மீன்பிடி திருவிழாவில் சுமார் ஆயிரம் கிலோ வரை மீன்கள் சிக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

அதிக மீன்கள் கிடைத்ததால், கிராம மக்கள் ஆனந்தம் அடைந்தனர். பின்னர் மீன்களை சமைத்து சாப்பிடவும், உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுப்பதற்காகவும் உற்சாகமாக கொண்டு சென்றனர். இதனால் ராஜக்காபட்டி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வீடுகளில் மீன்குழம்பு வாசனை கம, கமவென வீசியது.

Related Tags :
மேலும் செய்திகள்